கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் வாழைப்பழக்கடை என்ற இடத்தில் வலங்கைமான் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இத்தலம் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருச்சத்திமுற்றம் தலத்தில் அப்பர் தனக்கு திருவடி தீட்சை செய்யுமாறு இறைவனை வேண்ட அவரை இத்தலத்துக்கு வருமாறு இறைவன் அருளினார். இறைவன் அப்பர் தலை மீது தமது திருவடிகளை சூட்டியருளினார். இதனால் இத்தலத்தில் பெருமாள் சன்னதிகளில் அளிப்பது போன்ற சடாரி (இறைவன் திருவடி) பக்தர்களுக்கு சூட்டப்படுகிறது.
மூலவர் சுயம்பு லிங்கம். இறைவன் ஆறு நாழிகைக்கு ஒருமுறை ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறுகிறார். அதனால் இறைவனுக்குப் 'பஞ்சவர்ணேஸ்வரர்' என்று பெயர் உண்டு. வண்டு வடிவம் தாங்கி பிருங்கி முனிவர் வழிபட்டதால் இறைவன் திருமேனியில் துளைகள் உள்ளது. அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலம். இந்திரனிடமிருந்து முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜப்பெருமானைப் பெற்று திருவாரூர் செல்லும் வழியில் இத்தலத்தில் சிலநாள் தங்கியிருந்து தியாகராஜப்பெருமானை வைத்து வழிபட்ட தலம். |